சீனாவின் ஆட்சி முறை சித்தாந்தமும், சோஷியலிசமும், கம்யூனிசமும் கலந்தது தான். ஆனால், அதை முழுமையாக பின்பற்றினால், நாட்டில் சீரான வளர்ச்சி இருக்காது என்பதால், அதில் இருந்து சிறிது மாறி தான்செயல்படுகின்றனர். இந்தியாவில் விவசாயம் பிரதானம் என்றாலும், சேவை துறையில் பெரும் வளர்ச்சி அடைந்து விட்டோம். அதனால், ஒரு துறையை மட்டும், இந்திய பொருளாதாரம் சார்ந்திருக்கவில்லை. அதாவது, இந்தியாவின் வாடிக்கையாளர்கள், ஒரு தரப்பினர் மட்டும் அல்லர். ஆனால், இலங்கையில் அப்படி அல்ல.
* தேயிலை, சுற்றுலா, ரத்தின கற்கள் மட்டுமே, இலங்கைக்கு பிரதானமான வருமானத்தை கொடுப்பவை. கொரோனாவை தொடர்ந்து, உற்பத்தி குறைந்து தொழில்கள் படுத்து விட, மொத்த வருமானமும் பாதிக்கப்பட்டது
* ஏற்கனவே வெளிநாடுகளில் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை மேம்படுத்த எடுத்த தவறான கொள்கை முடிவு, சிக்கலை ஏற்படுத்தி விட்டது
* இலங்கை அரசு, தனியார் மயமாக்கல் விஷயத்தில் கெடுபிடியாக இருந்தது. அது போட்டியில்லாத வர்த்தகத்தை ஏற்படுத்தி தரம் குறைந்ததுடன், ஒரு கட்டத்தில் வியாபார வளர்ச்சியும் குறைந்தது
* மொழி, இனம் பிரச்னையால் உருவான உள்நாட்டு போர் பாதிப்பு முழுமையாக முடியவில்லை. இப்படி, இலங்கை சந்திக்கும் பிரச்னைகளை அடுக்கலாம்.
இந்த மொத்த சூழலுக்கும் நாட்டை ஆளும் ராஜபக்சே குடும்பத்தினர் தான் காரணம் என, ஒட்டுமொத்த இலங்கை மக்கள் நினைக்கின்றனர். அவர்களின் மொத்த கோபமும் ராஜபக்சே சகோதரர்கள் மீதே உள்ளது. மக்கள் எதிர்ப்பை தவிர்க்க, எதிர்க்கட்சிகளுடன் கூடிய மக்கள் அரசு என்று, ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால், இலங்கையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து கூட்டாக கொள்ளையடித்தன. அதனால், மக்கள் அவர்களையும் நம்ப தயாரில்லை.
மகிந்த ராஜபக்சே பதவி விலகினால் மட்டுமே, தன் தலைமையில் புதிய அமைச்சரவைக்கு ஏற்பாடு செய்யலாம் என்று கூறி வந்த எதிர்க்கட்சி தலைவர் சுஜித் பிரேமதாசா மீதும், மக்களுக்கு நம்பிக்கை இல்லை. அதிபருக்கு, நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மக்கள் கிளர்ச்சியை அடக்கும் நெருக்கடி ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரத்துக்கு கட்டுப்பட்ட அமைப்பாக, இன்று வரை இருந்து வருவதால், மக்கள் கிளர்ச்சியை அடக்க, ராணுவம் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில், நிலைமையை பயன்படுத்தி, ராணுவ புரட்சி ஏற்பட்டு, இலங்கையிலும் ராணுவ ஆட்சி அமைந்து விடுமோ என்ற அச்சமும் உள்ளது. அப்படியொரு சூழல் உருவாகுமோ என்று தான் இந்தியாவும் கவலைகொண்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, அண்டை நாடுகள், ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டால், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதிக்கத்துக்குள் சென்று விடும் வாய்ப்பு உள்ளது. இலங்கையில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் தொடருவதை, இந்தியா விரும்பவில்லை. அதனால் தான், இலங்கையின் பொருளாதார சூழலை சரிப்படுத்த, பல உதவிகளை செய்து வருகிறது.இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் கொடுப்பதை முழுதுமாக நிறுத்தி விட்ட சூழலில், இந்தியா தான் எல்லா உதவிகளையும் இலங்கைக்கு செய்தாக வேண்டும்.
இதற்காக, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பலரும், இலங்கைக்கு சென்றுள்ளதாக தகவல். கூடவே, கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொறுப்பையும், இந்தியா ரகசியமாக ஏற்றுஇருக்கிறது. கடந்த 1988ல் மாலத்தீவிலும் ராணுவ புரட்சி வெடித்தது. அப்போது பிரதமராக இருந்த ராஜிவ், மாலத்தீவுக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி வைத்தார்; மாலத்தீவில் அமைதி நிலவ ஏற்பாடு செய்தார்.
அன்று முதல் மாலத்தீவு மக்களும், அரசும் இன்று வரை இந்தியாவுக்கு விசுவாசமாக உள்ளனர். அதேபோல தான், இன்றைக்கு இலங்கைக்கு உதவினால், வருங்காலத்தில் அந்நாட்டு மக்களும் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பர். இலங்கையின் இன்றைய சூழல் மாற வேண்டும் என்றால், நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை அந்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்து, அதற்கேற்ப செயல்பட வேண்டும். அதனால், இந்தியாவின் ஆதரவை முழுமையாக பெற்று, நாட்டை இன்றைய இக்கட்டில் இருந்து மீட்டெடுக்க முயற்சிக்க வேண்டும்.
சில ஆண்டுகளாகவே, இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை மணி அடித்தது. ஆனால், இலங்கை தன் பாதையில் தொடர்ந்து பயணித்ததன் விளைவு தான், இன்றைய சூழல். அதே நிலையில் தான், நேபாளம், வங்கதேசம் நாடுகளும் தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றுகின்றன.இலங்கையை போன்ற நெருக்கடியான சூழல், அந்த நாடுகளுக்கும் விரைவிலேயே ஏற்படும் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். – நமது நிருபர் –
– இரா.கணேஷ்குமார் ,அரசியல் ஆய்வாளர்