சென்னை :ராஜ்யசபா எம்.பி., பதவியை கைப்பற்ற, காங்கிரசில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் காங்கிரசுக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை அக்கட்சிக்கு தர, தி.மு.க., முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலினிடம், காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியுள்ளதாகவும் தெரிகிறது. காங்கிரசுக்கு கிடைக்கஉள்ள ஒரு ராஜ்சபா எம்.பி., பதவியை பெற, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
![]() |
இருவரும் சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளனர். பிரியங்காவையும் சந்தித்து, சிதம்பரம் பேசியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்து வரும் காங்கிரஸ் சிந்தனை முகாமில், இனி குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி வழங்குவது என முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதன்படி பார்த்தால், மகன் கார்த்தி எம்.பி.,யாக இருப்பதால், சிதம்பரத்திற்கு எம்.பி., பதவி கிடைக்க வாய்ப்பில்லை. இதனால், அழகிரி நம்பிக்கையோடு இருக்கிறார்.
சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் அழகிரி. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, அவரை பரிந்துரைத்தவரும் சிதம்பரம் தான். ஆனால், இப்போது ராஜ்யசபா எம்.பி., பதவியை பிடிப்பதில், குருவுக்கும், சிஷ்யருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன், கேரளாவில் ராஜ்யசபா எம்.பி., பதவி காலியான போது, மூத்த தலைவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், மகளிர் காங்கிரஸ் தலைவியான ஜெபி மேத்தருக்கு, ராகுல் வாய்ப்பு அளித்தார்.
அதுபோல, தமிழகத்திலும் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்தில் போன்ற இளைஞர்கள் யாருக்காவது அதிர்ஷ்டம் அடிக்கலாம் என, காங்கிரசார் தெரிவிக்கின்றனர்.
Advertisement